யானை காலடியில் சிக்கிய இளைஞர்… இரண்டு முறை மிதித்தும் உயிர் தப்பிய அதிசயம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி, காட்டு யானையிடம் சிக்கி உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஹரித்வார் – டேராடூன் நெடுஞ்சாலையில், ராஜாஜி புலிகள் காப்பகத்திற்கு அருகிலுள்ள நேபாளி ஃபார்ம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சாலையில் வந்த காட்டு யானையின் அருகே சென்றுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, யானை வயிறு மற்றும் மார்புப் பகுதியில் இரண்டு முறை காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு யானை அங்கிருந்து விலகிச் சென்றது. உடனே அந்த இளைஞர் எழுந்து நின்றது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் மருத்துவ நிலை குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.காட்டு யானைகள் நடமாடும் வனப்பகுதி சாலைகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
