வடகொரியா புதிய அணு ஆயுத உற்பத்தி மையம் தொடக்கம்... பீதியில் நட்பு நாடுகள்!
வடகொரியா தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் புதிய மையத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய மையத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டார் அங்குள்ள நவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை தயாரிக்கும் வசதிகளை அவர் ஆய்வு செய்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்களின் அணு ஆயுத கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்று வடகொரியா கருதுகிறது. இதன் காரணமாகவே அதிபர் கிம் ஜாங் உன் இந்த புதிய மையத்தின் செயல்பாடுகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். தங்களின் பாதுகாப்பு திறனை பலமடங்கு அதிகரிக்க இந்த மையம் பெரிதும் உதவும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத உற்பத்தியை பெருக்கி வருவது அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அச்சத்தை தந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தனது புதிய மையத்தின் மூலம் அடுத்தகட்ட சோதனைகளுக்கு தயாராகி வருகிறது.
