"குளம்" போல் காட்சியளிக்கும் வைகை அணை... சித்திரைத் திருவிழாவுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்!
Mar 20, 2026, 09:00 IST
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, வைகை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான அளவு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மக்களின் உணர்வுகளோடு கலந்த சித்திரைத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளது.

வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 33 அடியாகச் சரிந்துள்ளது. வழக்கமாக 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடல் போல் காட்சியளிக்கும் அணை, தற்போது நீர் வற்றி வெறும் 2 சதுர கிலோமீட்டராகச் சுருங்கி, ஒரு பெரிய குளம் போல காட்சியளிக்கிறது.
கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. தற்போது அணையில் உள்ள 518 மில்லியன் கனஅடி நீரைக் கொண்டு மதுரை நகரின் குடிநீர் தேவையை இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே சமாளிக்க முடியும். வைகை அணைக்கு முக்கிய ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.

