களைகட்டும் மதுரை... அழகர் வரவேற்கத் தயாராகும் வைகை ஆறு - தூய்மைப் பணிகளில் மாநகராட்சி தீவிரம்!

 
வைகை சித்திரை வைகை சித்திரை

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப்ரல் 19) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அழகர் ஆற்றில் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் தரைத்தளத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 17-ம் தேதியே பந்தல் கால் நடும் விழா இனிதே நடைபெற்றது.

 மூல வைகை அணை

அழகர் ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றில் வரும் நீர் எவ்வித தடையுமின்றிச் செல்வதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகள் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்தத் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், ஆற்றுப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வைகை அணை

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதியும், தேரோட்டம் 29-ம் தேதியும் நடைபெற உள்ள நிலையில், அன்று மாலையே அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுவார். ஏப்ரல் 30-ம் தேதி தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெறும் நிலையில், மே 1-ம் தேதி அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இந்த அற்புதத் தருணத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மதுரையில் குவியத் தொடங்கியுள்ளதால், நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி கூடுதல் பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.