பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.... கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்!

 
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 20-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் ஆரம்பமானது. பகல் பத்து 10-ம் நாளில் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பாற்கடலை கடைந்தபோது அமுதத்தை அசுரர்கள் பறிக்க முயன்ற நிலையில், திருமால் மோகினியாக தோன்றி தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் இந்த அலங்காரம் அமைந்தது. அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ச்சுன மண்டபம் வந்து மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். வைர மாட்டல், மூக்குத்தி, வளையல், சதங்கை, பின்னல் ஜடை உள்ளிட்ட திருவாபரணங்கள் கண்கொள்ளா காட்சியாக அமைந்தன.

இதனைத் தொடர்ந்து ராப்பத்து திருவாய்மொழி திருநாள் இன்று தொடங்கியது. அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டபோது, ‘கோவிந்தா கோவிந்தா, ரங்கா ரங்கா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசமடைந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று மதியம் முதல் ஸ்ரீரங்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்த நிலையில் இருந்தன.

ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேலம் கோட்டை பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விழா நடந்தது. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட பல தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.