வைகாசி பவுர்ணமி.. கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்பு!

 
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி பெளர்ணமி கிரிவலம் ரயில் திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி பெளர்ணமி கிரிவலம் ரயில்

நினைத்தாலே முக்தி தரும் ஆன்மிகத் திருத்தலமான திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தொலைவுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கமாகும். அந்த வகையில், நடப்பு வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலத்திற்கான அதிகாரப்பூர்வ நேரத்தை அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு வைகாசி மாத பவுர்ணமி திதியானது வரும் மே 30-ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் 12:50 மணிக்குத் தொடங்கி, மறுநாள் மே 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2:41 மணிக்கு நிறைவடைகிறது. பஞ்சாங்கக் கணிப்புகளின்படி, பவுர்ணமி தொடங்கும் நாளான மே 30-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் செல்வது ஆன்மீக ரீதியாக மிகச் சிறப்பான பலன்களைத் தரும் என்று கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.

கிரிவலம்

மேலும், அன்றைய தினமே முருகப்பெருமானின் அவதார திருநாளான 'வைகாசி விசாக'மும் இணைந்து வருவதால், வழக்கமான பவுர்ணமி நாட்களைக் காட்டிலும் இந்த முறை திருவண்ணாமலையில் வழக்கத்திற்கு மாறாக லட்சக்கணக்கான பக்தர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு புனித தினங்கள் ஒரே நாளில் அமைவதால், இந்த வைகாசி கிரிவலம் பக்தர்களுக்கு இரட்டிப்பு புண்ணிய பலன்களை வாரி வழங்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கிரிவலம் அமைவதால், பக்தர்களின் வருகை மிக அசாத்திய அளவில் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பல்வேறு பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

கிரிவலம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும், தற்காலிக ரயில்களும் இயக்கப்படவுள்ளன. கிரிவலப் பாதை முழுவதும் தடையற்ற குடிநீர் விநியோகம், தற்காலிகக் கழிவறைகள், மருத்துவ உதவிக் முகாம்கள் மற்றும் தூய்மைப் பணிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படவுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கிரிவலப் பாதை மற்றும் மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படவுள்ளது.