"திமுக ஆட்சியில் ஊழல், மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர்"...வைகோ ஆவேசம்!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கடந்த கால ஆட்சி குறித்துப் பேசிய அவர், முந்தைய திமுக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உடனான தங்களது கூட்டணி குறித்து அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் அரசின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்து, வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக வைகோ குற்றம் சாட்டினார். முந்தைய திமுக ஆட்சியில் கமிஷன், கரெக்ஷன், கட்டிங் என அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியதாகப் பகிரங்கமாகச் சாடினார்.தாங்கள் அப்போது அந்த ஆட்சிக் கூட்டணியில் ஓர் அங்கமாக இருந்ததால், நாகரிகம் கருதி இது குறித்து எதையும் பேசவில்லை என்றும், கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிப்பது அயோக்கியத்தனம் என்பதால் அப்போது அமைதி காத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

தவெக தலைமையிலான தற்போதைய கூட்டணியில் மதிமுக மிகவும் உறுதியாக நீடிக்கிறது என்று தெரிவித்த வைகோ, இந்தக் கூட்டணி வரும் ஐந்து ஆண்டுகள் மட்டுமல்லாது அதற்குப் பிறகும் வலுவாகத் தொடரும் என்றார். மேலும், எதிர்காலத்திலும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய்யே தொடர்ந்து நீடிப்பார் என்ற முழு நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் பேசினார்.இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, "திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் இந்த ஊழல்களை ஏன் நீங்கள் தட்டிக்கேட்கவில்லை?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த வைகோ அவருடன் காரசாரமான வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து அந்தப் பகுதியில் சில நிமிடம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
