வைஷாலி வரலாற்று சாதனை... உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி!
சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகரில் நடைபெற்ற 'ஃபிடே' மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். வைஷாலி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம், மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

தொடரின் இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் வலுவான வீராங்கனையான கேத்ரினா லாக்னோவை எதிர்கொண்ட வைஷாலி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லாக்னோவை வீழ்த்தியதன் மூலம், 14 சுற்றுகளின் முடிவில் 8.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில், மற்றொரு முக்கிய வீராங்கனையான பிபிசரா அசாவுபாயேவா தனது ஆட்டத்தை 'டிரா' செய்ததால், வைஷாலியின் வெற்றி உறுதியானது.
செஸ் வரலாற்றில் ஒரு சகோதரனும் (பிரக்ஞானந்தா), சகோதரியும் (வைஷாலி) கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்றதே பெரிய சாதனையாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வைஷாலி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் நடப்பு சாம்பியன் ஜூ வென்ஜூனை வைஷாலி எதிர்கொள்ள உள்ளார்.

தனது வெற்றி குறித்துப் பேசிய வைஷாலி, "இது ஒரு கனவு நனவான தருணம். எனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவின்றி இது சாத்தியமாகியிருக்காது" என உருக்கமாகத் தெரிவித்தார். செஸ் உலகில் இந்தியாவின் முகமாகப் பார்க்கப்படும் வைஷாலிக்குத் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
