சாலையோரம் அடுத்தடுத்து மோதிய பைக்குகள்; இளைஞர் பலி, தந்தை–மகன் படுகாயம்

 
சேலம்

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலையோரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த தார் ஊற்றும் இயந்திரத்தின் மீது அடுத்தடுத்து இரு பைக்குகள் மோதிய விபத்தில், 31 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் தந்தை, 5 வயது மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

வீட்டுமனைப் பிரிவுக்கு சாலை அமைக்கும் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட தார் இயந்திர வாகனம், இரண்டு நாட்களுக்கு முன்பு பழுதடைந்து பஞ்சரானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், வாகனத்தின் அருகே எச்சரிக்கைப் பலகையோ, ஒளிரும் விளக்குகளோ வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு அந்த வழியாக பைக்கில் சென்ற பிரவீன் (31), இருட்டில் வாகனம் தெரியாமல் அதன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் மற்றொரு பைக்கில் வந்த பிரசாத் (35), தனது 5 வயது மகனுடன் தார் இயந்திரத்தின் மீது மோதி காயமடைந்தார்.அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.