கோவை பல்கலை விடுதியில் மாணவி மர்ம மரணம் - வானதி சீனிவாசன் வேதனை!
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துப் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி தாரணிகா, நேற்று முன் தினம் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், இந்த மரணத்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்:
மாணவி தாரணிகாவுக்கு ஏற்கனவே கடுமையான உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகப் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களது மகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தார் எனக் கூறும் பெற்றோர், அவரது இந்தத் திடீர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். "மாணவி தாரணிகாவின் மர்ம மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இதில் காவல்துறை மிக வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற தீவிர விசாரணையை மேற்கொண்டு, மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களுக்கு அவ்வப்போது முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கத் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
