பாஜக மகளிர் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு!

 
வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நன்றியறிவிப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் பாஜக தேசிய மகளிர் அணியை வழிநடத்தும் பொறுப்பைத் தனக்கு அளித்து நம்பிக்கை வைத்த கட்சித் தலைமைக்கும் மூத்த தலைவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் வாழ்த்துரை ..!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பெண் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு நபராகத் தன்னைப் பட்டை தீட்டி எண்ணற்ற அனுபவங்களையும் நினைவுகளையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் தடைகளைத் தகர்த்து உயர்ந்து வரும் நாட்டின் 'பெண் சக்தியின்' உறுதிக்கும் சாதனைகளுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிர் அணியின் புதிய பொறுப்பாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், அமைப்பு இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலின்படி, வானதி சீனிவாசனுக்குப் பதிலாகச் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எம்பி ரூப் குமாரி சவுத்ரி தேசிய மகளிர் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.