வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய சிறுவர்கள்... அதிர்ச்சி!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் ரயில் நிலையப் பகுதியில் தாரமங்கலம் நோக்கிச் செல்லும் தண்டவாளப் பகுதியில் நேற்று மாலை வந்தே பாரத் அதிவேக ரயில் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்கள் சிலர் விளையாட்டாக அந்த அதிவேக ரயில் மீது திடீரென கற்களை வீசி எறிந்தனர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் பலத்த சத்தத்துடன் உடைந்து சிதறியதால் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியும் பயமும் அடைந்தனர்.
இதுகுறித்து ரயில் ஓட்டுநர் உடனடியாக அடுத்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அவசரத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் தான் இந்த கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவர்களைப் பிடித்த காவல்துறையினர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து தீவிர எச்சரிக்கை விடுத்தனர். ஓடும் ரயில் மீது கல் வீசுவது எவ்வளவு பெரிய ஆபத்தானது மற்றும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை அவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் இனிமேல் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அந்தச் சிறுவர்களை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
