அரசு விழாக்களில் இனி தேசிய கீதத்துடன் வந்தே மாதரம் தேசியப் பாடல் கட்டாயம்... திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 
vande matram vande matram

 

தேசியப் பாடலான வந்தே மாதரத்தைப் பாடும்போது அவமதிப்பு ஏற்படுத்துவதையோ அல்லது அதற்கு இடையூறு விளைவிப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (மே 5, 2026) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 1971-ஆம் ஆண்டு தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள சட்டப்படி, தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பவர்களுக்கு மட்டுமே 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் தாயைப் போற்றும் இந்தப் பாடலைப் பங்கிம் சந்திர சட்டர்ஜி 1880-களில் எழுதிய நிலையில், இதற்குத் தேசியப் பாடல் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் தேசிய கீதமும் தேசியப் பாடலும் இசைக்கப்படும்போது, தேசியப் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டிஷ் காலத்தில் சில தரப்பினரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்தப் பாடல் காங்கிரஸால் சுருக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் இந்த அதிரடி முடிவு, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களைப் பிடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரத்தின் 6 பத்திகளும் அரசு விழாக்களில் பாடப்பட வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கு இனிச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும். இதன் மூலம் தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பு வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.