வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.4.75 கோடி வரி நோட்டீஸ்; வங்கிக் கணக்கும் முடக்கம்!

 
ஜிஎஸ்டி

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவையில் இருப்பதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

GST Notice for nearly RS 5 Crore  GST NOTICE FOR DOMESTIC WORKER  YASMIN OF VANIYAMBADI HUBBY DRIVER  FIRM NAMED TVL Yas Traders  MISUSE OF IDs Ambur other areas

வாணியம்பாடி பாபு நகரைச் சேர்ந்த சையத் காதர் (38) ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (33) வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து யாஸ்மினுக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

அதில், சென்னை முகப்பேர் கிழக்கில் ‘டி.வி.எல். யாஸ் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், 2024–2025 நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியாக ரூ.4 கோடியே 75 லட்சம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

ஆனால், தான் எந்த நிறுவனத்தையும் நடத்தவில்லை எனக் கூறும் யாஸ்மின், தனது ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.