"திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க" - திமுகவுக்கு வன்னி அரசு எச்சரிக்கை!

 
விசிக வன்னி அரசு

கூட்டணி விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் கருத்து தான் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்றும், திமுகவினர் தொடர்ந்து அவதூறு பரப்பினால் விசிகவினர் திருப்பி அடிப்பார்கள் என்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னி அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வன்னி அரசு, தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்தது குறித்துத் திமுகவினர் விமர்சித்து வருவதற்குக் கடுமையான பதிலடி தந்துள்ளார்.

ஆ.ராசா

திமுகவுடன் நட்புணர்வோடு இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ஏன் தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் அவரது கருத்துதான் கட்சியின் இறுதி நிலைப்பாடு; அவரின் பேச்சுக்குத் தனி நபர் யாரும் உரை எழுத முடியாது.

விசிக துரோகம் இழைத்து விட்டதாகத் திமுகவினர் கூறுகிறார்கள். உண்மையில் யார் துரோகம் செய்தது? கடந்த முறை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதே விசிகவிற்கு அமைச்சரவையில் திமுக இடம் கொடுத்திருக்க வேண்டும். இன்று அதற்கான வாய்ப்பு தவெக ஆட்சியில் அமைந்ததும், தங்களது ஆற்றாமையின் காரணமாக விசிகவினரைத் துரோகிகள் என்று திமுகவினர் விமர்சிக்கிறார்கள்.

விசிக வன்னியரசு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வன்னி அரசு பேசுகையில், "ஆ.ராசா போன்றவர்கள் தொடர்ந்து விசிக மீது அவதூறு பரப்பினால் அதற்குரிய தக்க பதிலடியைக் கொடுப்போம். திமுகவினர் தங்களது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்; எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. விசிகவினர் தமிழ்நாட்டையே வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள்; மாநிலத்தின் திசைவழியைத் தீர்மானிப்பவர்கள். திமுகவினர் பரப்பும் அவதூறுகள் அனைத்தும் அவர்களின் ஆற்றாமையின் வெளிப்பாடு தான். நாங்கள் திருப்பி அடித்தால் உங்களால் தாங்க முடியாது."

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திமுக மற்றும் விசிக இடையேயான அரசியல் வார்த்தை மோதல்கள் தற்போது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.