லஞ்சம் கேட்ட VAO... லஞ்சம் கொடுக்க பொதுமக்களிடம் பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய விவசாயி!

 
லஞ்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில், பூர்வீகச் சொத்தில் பெயர் சேர்க்கக் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதைக் கண்டித்து, விவசாயி ஒருவர் பொதுமக்களிடம் தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அப்துல் சலீம் ஷேக். இவர் தனது பூர்வீகச் சொத்தின் கூட்டுப் பட்டாவில் தனது பெயரைச் சேர்க்கக் கோரி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். அப்போது, அந்த அதிகாரி பட்டா வழங்கத் தன்னிடம் லஞ்சம் கேட்டுள்ளதாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறியதாகவும் அப்துல் சலீம் ஷேக் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு அதிகாரிக்கு கொடுக்கத் தன்னிடம் பணம் இல்லை என்பதால், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் தட்டேந்திப் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் அவர் இறங்கினார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் விவசாயி மேற்கொண்ட இந்த நூதனப் போராட்டம் அப்பகுதியில் பெரும் கூட்டத்தைக் கூட்டியதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாகக் கவனம் பெற்றுள்ளது.