மீன் குழம்பும், மீன் வறுவலும் லஞ்சமாகக் கேட்ட வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் - கரூரில் பரபரப்பு!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வங்கிக் கடன் பெறுவதற்காகச் சிட்டா நகல் கோரிய விவசாயியிடம், லஞ்சமாக மீன் வறுவலும் மீன் குழம்பும் கேட்டுப் பெற்றுக் கொள்ள முயன்ற கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள தேவர்மலையைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர், வங்கிக் கடன் பெறுவதற்காகச் சிட்டா நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்தச் சான்றிதழ் வழங்குவதற்காக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரான கார்த்திக் என்பவர் விவசாயியின் மகனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமக்கு '2 மீன் வறுவல் மற்றும் மீன் குழம்பு பார்சல்' வாங்கித் தருமாறு லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

அதிகாரியின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த விவசாயியின் மகன், வி.ஏ.ஓ தன்னிடம் மீன் குழம்பு மற்றும் வறுவல் லஞ்சமாகக் கேட்ட தொலைபேசி உரையாடல் பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
விவசாயியிடம் லஞ்சமாக உணவுப் பொருட்கள் கேட்ட வி.ஏ.ஓ கார்த்திக்கின் செயல் குறித்து வெளியான புகாரின் அடிப்படையில், அவர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
