“இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மட்டும்தான்” - விசிக தலைவர் திருமாவளவன் முழக்கம்!
சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியலில் எதிர்காலக் கூட்டணி கணக்குகள் மற்றும் தவெக கூட்டணியில் இணைந்ததற்கான காரணங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்நிகழ்வில் அவர் வெளியிட்ட முக்கியக் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்ற நிலை மாறி, கூட்டணி ஆட்சி மட்டுமே சாத்தியம் என்ற புதிய அரசியல் யதார்த்தத்தை விசிக முன்னெடுத்துள்ளதாகவும், தங்களின் நீண்டகாலக் கனவு தற்போது நினைவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தவெகவைச் சரியான திசையில் வழிநடத்த வேண்டிய பொறுப்புணர்வே தங்களை அக்கூட்டணிக்குத் தள்ளியதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவேளை விசிக அங்கே இடம்பெறாமல் போயிருந்தால் அத்தளத்தை வலதுசாரி சக்திகள் முழுமையாக ஆக்கிரமித்திருக்கக் கூடும் என்றும், அந்த ஆபத்தைத் தடுத்தே விசிக இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
எந்தவொரு அமைச்சர் பதவிக்காகவும் அல்லது அதிகார ஆசையாலும் தவெக கூட்டணியில் விசிக இடம்பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், கொள்கை ரீதியான மற்றும் அரசியல் சூழலின் அவசியத்தைக் கருதியே இந்த அணி மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார். திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழல் நிலவியதாகவும், அங்குள்ள அதிருப்திகள் மற்றும் வெளியேற்றங்களுக்குத் தங்களது காரணங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய திருமாவளவன், தவெக அரசு அமைந்ததின் மூலம் புதியதொரு அரசியல் சமன்பாடு உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
