"விசிக தமிழகத்தின் ஆளும் கட்சியாக வளரவேண்டும்" - திருமாவளவன் உரை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில்' கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், வருங்காலத்தில் விசிக தமிழகத்தின் ஆளும் கட்சியாக மாறும் என உரையாற்றினார்.
தமிழர்களின் மொழி, இனம் மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், மாநிலங்களின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் வகையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாநாட்டின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம் என வலியுறுத்தும் ஆதிக்க அரசியலை நிராகரித்து, அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும் உறுதுணையாக நின்று கூட்டாட்சி ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் செயல்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பயணிப்பதாகத் திருமாவளவன் தெரிவித்தார்.
இனிவரும் அரசியல் களத்தில் விசிகவும் தவெகவும் இணைந்து செயல்படும் என்றும், விசிகவும் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக ஆளும் கட்சிப் பொறுப்பிற்குப் பரிணமிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநாட்டு திடலில் கூடி இருந்த கூட்டத்தையும் தாண்டி வெளியே லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்ததால், தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருமாவளவன் தனது உரையை விரைவாக முடித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாநாடு நிறைவுபெற்றது.
