வேடந்தாங்கல் மாணவி கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கோரி ஜனாதிபதிக்கு மனு!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் முறையான நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் தரப்பில் இந்திய குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முள் காட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தையும், பொதுமக்கள் மத்தியில் கடும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், உள்ளூர் போலீசார் இந்த வழக்கை முறையாகக் கையாளவில்லை என்றும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு மாநில எல்லையைத் தாண்டியும், பல்வேறு செல்வாக்கு மிக்க நபர்களோடும் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுவதால், இதனை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி வேடநத்தம் மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர் சிலரைக் கைது செய்துள்ள போதிலும், இந்த வழக்கில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
