காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் - திண்டுக்கல்லில் புதிய முயற்சி!
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினசரி டன் கணக்கில் சேரும் காய்கறி கழிவுகளைப் பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்யும் புதிய முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குப்பைகளாகத் தேங்கும் அழுகிய காய்கறி மற்றும் மக்கும் கழிவுகளை நவீன மீத்தேன் தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரமாக மாற்றும் சிறப்பு மையம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் தினந்தோறும் சுமார் 5 டன் அளவிலான காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் தோராயமாக 100 முதல் 120 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மார்க்கெட் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை முறையாக நிர்வகிப்பதோடு, மின் தேவைகளுக்கும் இது ஒரு மாற்றுத் தீர்வாக உருவெடுத்துள்ளது.
காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் இந்த நவீன செயல்முறை பல அறிவியல் வழிமுறைகளைக் கொண்டுள்ளது. மார்க்கெட்டுகளில் சேரும் கழிவுகள் உடனடியாகச் சேகரிக்கப்பட்டு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் நன்றாக அரைக்கப்பட்டு கூழாக்கப்படுகின்றன. பின்னர் இந்தச் கூழ் ராட்சத கலன்களில் செலுத்தப்பட்டு, காற்றில்லாச் சூழலில் மீத்தேன் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் மீத்தேன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி, பிரத்யேக ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மைத் துறையில் ஒரு முன்மாதிரித் திட்டமாக விளங்கும் இந்த மையத்தின் மூலமாக, நகரில் குப்பைகள் தேங்குவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன. காய்கறி மார்க்கெட்டுகளில் தேங்கும் கழிவுகளை அகற்றுவது மாநகராட்சி நிர்வாகத்திற்கு நீண்டகாலமாகப் பெரிய சவாலாக இருந்து வந்த நிலையில், இத்தகைய ஆக்கப்பூர்வமான தொழில்நுட்பம் அதற்குச் சரியான தீர்வை வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் இந்தத் திட்டம் உள்ளூர் மின் தேவைகளுக்கும் பக்கபலமாக அமைகிறது. இத்தகைய நவீனத் திட்டங்களை மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்துவதன் மூலம் தூய்மையான சுற்றுச்சூழலையும், நிலையான எரிசக்தி ஆதாரங்களையும் வெற்றிகரமாக உருவாக்க முடியும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
