இனி டோல்கேட்ல வாகனங்களை நிற்காமல் செல்லலாம்... சுங்கக் கட்டணம் செலுத்த விரைவில் புதிய முறை!

 
சுங்கச்சாவடி டோல்கேட் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல்

சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தத் தேவையில்லாமல், தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் (Satellite), செயற்கை நுண்ணறிவு மற்றும் பாஸ்டேக் ஆகியவற்றை இணைத்த தடையற்ற சுங்கக்கட்டண வசூல் முறை விரைவில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இப்பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் 60 முதல் 70 சதவீதம் வரை நிறைவடையும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

சுங்கச்சாவடி

பாஸ்டேக் சேவையானது வாகனத்தின் பதிவு எண்ணுடன் நேரடியாக இணைக்கப்படும் வகையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நவீன முறையின் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் முற்றிலும் தவிர்க்கப்படுவதால், ஆண்டுதோறும் 71 கோடி மணிநேரமும், 56 கோடி லிட்டர் எரிபொருளும் வீணாவது தடுக்கப்படும்.

வாகனப் பதிவு எண் மற்றும் பாஸ்டேக் இரண்டையும் ஒருங்கிணைக்கும் இந்த புதிய முறையால், சுங்கக்கட்டண வசூலில் கசிவுகள் தவிர்க்கப்பட்டு ஆண்டுதோறும் அரசுக்குக் கூடுதலாக ரூ.10,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.