வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

 
வேளாங்கண்ணி கடற்கரை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி வரும் 8-ம் தேதி வரை கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழா வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாகைக்குப் படையெடுத்து வருகின்றனர்.

திருவிழாவிற்காகப் பாதயாத்திரையாக வரும் பக்தர்களில் சிலர் ஆபத்து உணராமல் கடலில் இறங்கி நீண்ட தூரம் சென்று குளிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, உயிர் சேதங்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

வேளாங்கண்ணி

காவல் துறை கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்பிரமணிய பாலச்சந்திராவின் பரிந்துரையின் பேரில், வரும் 8-ஆம் தேதி வரை கடலில் மக்கள் குளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது வேளாங்கண்ணி கடற்கரை பகுதி முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.