25 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - வேலூரில் சோகம்!
பேருந்தை இயக்கிய போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் 25 பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து பேருந்தைச் சாலையோரத்தில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே உள்ள தெக்குப்பட்டியைச் சேர்ந்த வெங்கடசாமி (59) என்பவர் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பேபி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில், குடும்பத்துடன் வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை 8 மணியளவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாகச் சேலம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தை வெங்கடசாமி இயக்கியுள்ளார். அவருடன் அன்பழகன் என்ற நடத்துநரும் பணியில் உடன் இருந்தார்.
பேருந்து குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் புதிய பைபாஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநர் வெங்கடசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பு வந்துள்ளது. அந்த இக்கட்டான நிலையிலும் சாமார்த்தியமாக, பேருந்தை வேகமாக இயக்காமல் மெதுவாக ஓட்டி வந்து சாலை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். அதன் பின்னரே அவர் மயங்கிச் சரிந்துள்ளார்.

ஓட்டுநரின் நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் கண்ணீருடன் கூறுகையில், ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது பேருந்து தாறுமாறாக ஓடியிருந்தால் கெங்கையம்மன் பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தியதாகக் கூறித் துயரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
