தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி; உடைந்த மது பாட்டில்களால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலி மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த தனியார் சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதியது. இந்த மோதலில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்தது.
லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து சாலையில் சிதறின. இதனால் வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் லாரியை மீட்டு, சாலையில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளை அகற்றினர்.

இதன் காரணமாக சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு சாலை சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
