அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேலுமணி தரப்பு தீவிரம் - பின்னணியில் நடக்கும் அரசியல் நகர்வுகள்!
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில், கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகச் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேலுமணி தரப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை வலுப்படுத்தும் நோக்கில், வேலுமணி மற்றும் சண்முகம் தரப்பைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் மற்றும் முக்கியத் தலைவர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் அதிமுகவில் பிரிந்து சென்ற அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதன் பிறகே தனது இறுதி நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
வேலுமணி தரப்பினரின் இந்த நகர்வுகளை முன்கூட்டியே அறிந்த எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், சசிகலாவைச் சந்தித்துச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எதிர்காலத்தில் ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த காலங்களில் தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிச் சசிகலா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் தற்போதைய அரசியல் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
