நெகிழ்ச்சி வீடியோ...நிலநடுக்க இடிபாடுகளில் 18 நாள் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 ஆகவும், பின்னர் நிலப்பரப்பின் மேற்பகுதிக்கு அருகே 7.5 என்ற அளவிலும் தாக்கிய இந்த நிலநடுக்கங்களால் தலைநகர் காரகாஸ் உள்பட பல்வேறு மாகாணங்கள் தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Rescuers pulled a mother and her newborn baby to safety after they survived more than 24 hours trapped beneath the debris following the powerful earthquake in Venezuela. pic.twitter.com/id5FD7d5Jz
— Massimo (@Rainmaker1973) June 27, 2026
பயங்கரமான இந்த அழிவுகளுக்கு இடையே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த இயற்கை பேரிடரால் 3 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள சூழல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், தற்போதைய நிலையில் மீட்புப் பணிகள் இரவு பகலாகத் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த பெருந்துயரத்திற்கு இடையே கட்டிட இடிபாடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாகச் சிக்கியிருந்த, பிறந்து 18 நாட்களேயான ஒரு குழந்தை உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மீட்புக் குழுவினர் நடத்திய தீவிரத் தேடுதலில் அந்தப் பிஞ்சு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மீட்பு முயற்சியில், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அந்தக் குழந்தையின் தாயாரும் அதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் இருந்து உடல்நலத்துடன் மீட்கப்பட்டார்.
