சொந்த வீட்டிற்கு திரும்பும் சுக்கிரன்.. லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 6 ராசிக்காரர்கள்!
ஜோதிட சாஸ்திரத்தில் செல்வத்தின் அம்சமான சுக்கிர பகவானும், புத்திக்கூர்மையின் அதிபதியான புதன் பகவானும் ஒரே ராசியில் இணையும்போது உருவாகும் அற்புத அமைப்பு ‘லட்சுமி நாராயண ராஜயோகம்’ என அழைக்கப்படுகிறது. இன்று நவம்பர் 22-ம் தேதி சுக்கிர பகவான் கன்னி ராசியிலிருந்து தனது சொந்த வீடான துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகி, அங்குள்ள புதனுடன் இணைந்து பயணிக்க உள்ளார். சுக்கிரன் ஆட்சி பெற்று அமரும் இந்தச் சேர்க்கையால், குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப நலன் சார்ந்த சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சுக்கிரன் மகாலட்சுமியின் அம்சமாகவும், புதன் நாராயணனின் அம்சமாகவும் கருதப்படுகின்றனர். இன்று நவம்பர் 22-ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் பிரவேசித்துப் புதனுடன் இணைவது கூடுதல் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இந்த யோகக் காலத்தில் செயல்பாடுகளில் புத்திசாலித்தனமும், பொருளாதார விவகாரங்களில் சீரான முன்னேற்றமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

1. ரிஷபம் : ராசிநாதன் சுக்கிரன் புதனுடன் இணைவதால் நிதி விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை மற்றும் தொழிலில் வருமானம் உயரும்; கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் கைகூடும்; எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
2. மிதுனம் : ராசிநாதன் புதனுடன் சுக்கிரன் இணைவதால் தன்னம்பிக்கையும் பணி சார்ந்த உத்வேகமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். பிள்ளைகள் மூலம் ஆதரவும், பூர்வீகச் சொத்துகள் வழியே நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கும், புதிய வியாபாரத் திட்டங்களுக்கும் சாதகமான சூழல் அமையும்.
3. கடகம் : தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் புதிய வாய்ப்புகளும் முன்னேற்றமும் உருவாகும். வண்டி, வாகனம் மற்றும் சொத்து தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணியிடத்தில் திறமை வெளிப்படும்; புதிய பொறுப்புகள் தேடி வரும். நிதி நிர்வாகத்தில் மேம்பாடும், குடும்பத்தில் இனிமையான சூழலும் நிலவும்.

4. துலாம் : உங்கள் ராசியிலேயே சுக்கிரன் ஆட்சி பெற்றுப் புதனுடன் இணைவதால் நேர்மறையான பலன்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் ஆளுமைத் திறனும் மேம்படும். மேலதிகாரிகளின் பாராட்டுகளும், சிலருக்கு ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் லாபகரமான ஒப்பந்தங்கள் அமையும்.
5. மகரம் : கர்ம ஸ்தானத்தில் உருவாகும் இந்த யோகம் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்பார்த்ததை விட அதிக பலன்கள் கிடைப்பதுடன், மேலதிகாரிகளின் அங்கீகாரமும் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வும் கிடைக்கலாம். சரியான திட்டமிடல் மற்றும் புதிய உத்திகள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உருவாகும்.
6. கும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் ஏற்படும் இந்தச் சேர்க்கையால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புதிய சுபகாரிய யோகங்களும் அமையும். தந்தை மற்றும் பெரியவர்களின் ஆசியால் செயல்பாடுகளில் உயர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள், ஆலோசனைகள் மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மற்றும் குடும்பம் சார்ந்த கவலைகள் நீங்கி மன அமைதி ஏற்படும்.
