பிரபல நடிகர், டப்பிங் கலைஞர் ஷ்யாம் குமார் மாரடைப்பால் காலமானார்!
தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இச்செய்தி திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷ்யாம் குமார் ஜீவரத்தினத்தின் திடீர் மறைவு குறித்த சோகமான செய்தியை, அவரது நெருங்கிய நண்பரும் சக நடிகருமான ஆதேஷ் பாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகப் பிரபலங்கள், சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இணையவழியாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
'ராஜமாபுரம்' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ஷ்யாம் குமார்..
'ஜோக்கர் நாற்காலி', 'இட்லி கடை' போன்ற மக்களின் கவனம் ஈர்த்த குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், டப்பிங் கலைஞராகவும் பல்வேறு கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துத் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
