பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர் ஜி.வி. நாராயண ராவ் காலமானார்!

 
நாராயண

மூத்த தெலுங்குத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.வி. நாராயண ராவ், நீண்டகால உடல்நலக் குறைபாடு காரணமாக ஹைதராபாத்தில் தனது 73-வது வயதில் காலமானார். அவரது மறைவு தெலுங்குத் திரையுலகிலும் நாடக உலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1953-ல் பிறந்த நாராயண ராவ், குண்டக்கல் மற்றும் ஹைதராபாத்தில் வளர்ந்தார். இவரது தந்தை ஜி. பிரசாதராவ், புகழ்பெற்ற சாரதி ஸ்டுடியோஸின் விநியோகஸ்தராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர்.

கடந்த 1973-ல் மெட்ராஸ் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த அவர், அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சக மாணவராகவும் நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் 1976-ல் வெளியான 'அந்தூலேனி கதா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகச் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதை வென்றார்.

'ஓகா ஊரி கதா' போன்ற படங்களில் கதாநாயகனாகத் தடம் பதித்த அவர், பின்னர் குணச்சித்திர வேடங்களுக்கு மாறி 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் திறம்பட நடித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர்.

சினிமா மட்டுமின்றி நாடகத்துறையுடனும் இவருக்கு வலுவான தொடர்பு இருந்தது. முகமது பின் துக்ளக், பிரதாபருத்ரியம், மஞ்சுதேரா போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் நடித்துள்ள இவர், மறைந்த பிரபல நடிகர்களான கோட்டா சீனிவாச ராவ், நூதன் பிரசாத், தேவதாஸ் கனகலா உள்ளிட்ட பல முன்னணிக் கலைஞர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை எனப் பல துறைகளில் முத்திரை பதித்த அவரது மறைவுக்குத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் (MAA) மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.