"வெற்றி விவசாயி உரிமைத் தொகை" - ஆண்டுக்கு ₹15,000 நிதியுதவி - தவெக அரசின் புதிய வேளாண் பட்ஜெட்!

 
விவசாயம் உதவித்தொகை விவசாயம் உதவித்தொகை

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'வெற்றி விவசாயி உரிமைத் தொகை' திட்டத்தை அமல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது விவசாயிகளைக் கவரும் வகையில் தவெக அறிவித்த இந்தத் திட்டம், தற்பொழுது விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய வேளாண் பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் பயிர்ச் சாகுபடிச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தவெக தனது தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தைக் குறிப்பிட்டிருந்தது. சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும், விதைப்பு மற்றும் சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூபாய் 15,000 நிதியுதவி வழங்கப்படும்.

இந்த மொத்தத் தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக (தலா ₹7,500) பிரித்துச் செலுத்தப்படும் எனத் தவெக வாக்குறுதி அளித்திருந்தது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்து, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில், இம்மாநிலத்தின் புதிய நிதியாண்டுக்கான பிரத்யேக வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த பட்ஜெட்டில், 'வெற்றி விவசாயி உரிமைத் தொகை' திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான விவசாயிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனப் பொதுமக்களும், விவசாயச் சங்கங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் 'பிஎம் கிசான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தொகை ஆண்டுக்கு மூன்று தவணைகளாக (தலா ₹2,000) விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ₹6,000 நிதியுதவியுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசின் புதிய தவெக அரசு அறிவிக்கவுள்ள 'வெற்றி விவசாயி உரிமைத் தொகை' ₹15,000 என்பது அதைவிட இரு மடங்குக்கும் மேல் அதிகம் என்பதால், இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும், வேளாண் உற்பத்தியிலும் இது மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் எனப் பார்க்கப்படுகிறது.