‘வேட்டையன்’ பராக்... பராக்... குஷியில் ரசிகர்கள்... அக்டோபர் 10-ல் ரிலீஸ் உறுதி!
‘வேட்டையன்’ பராக்... பராக்... என்று அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் தேதி உறுதியாகியிருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
‘சந்திரமுகி’ படத்தில் அந்த 10 நிமிடங்கள் வந்த ‘ரா.. ரா..’ பாட்டும், வேட்டையன் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பெரும் வைரலானது. ரஜினியை அத்தனை ஸ்டைலாகவும், துள்ளலுடனும் பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போதே வேட்டையன் கதாபாத்திரத்தை வைத்தே தனியே ஒரு படம் செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ‘வேட்டையன்’ பட டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஏற்கெனவே சூர்யாவின் ‘கங்குவா’ பட ரிலீஸ் அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரஜினியுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக கங்குவா தள்ளிப் போகுமா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
‘பேட்ட’, ‘தர்பார்’, ’ஜெயிலர்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அனிருத்- ரஜினி கூட்டணி நான்காவது முறையாக ’வேட்டையன்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, கேரளா, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘தங்கலான்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியில் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், ரஜின் பட ரிலீஸையடுத்து, ‘வேட்டையன்’ படத்துடன் மோதுவதைத் தவிர்க்க ‘கங்குவா’ ரிலீஸ் தள்ளிப் போகுமா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
