தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி... ஆக.17-ல் திருவாரூர் முழுவதும் டிரோன்கள் பறக்கத் தடை!
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு நிமித்தமாக அன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் அதிரடித் தடை விதித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேரரையாற்ற உள்ளார்.

துணை ஜனாதிபதியின் வருகையையொட்டித் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி நாள் முழுவதும் திருவாரூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ட்ரோன் சாதனங்களைப் பறக்கவிடுவதற்கோ அல்லது செயல்படுத்துவதற்கோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பாதுகாப்பு விதிமுறைகளையும் தடையையும் மீறி யாரேனும் ட்ரோன்களைப் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
