நாளை கோவை வருகிறார் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - ட்ரோன்கள் பறக்கத் தடை!

 
கோவை ராதாகிருஷ்ணன்

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவைக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கோவை மாநகரம் முழுவதும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகத்தில் புதிய நர்சிங் கல்லூரி திறப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

சிறப்பு விழாவுக்காகத் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் துணை குடியரசுத் தலைவர், நர்சிங் கல்லூரியைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். விழா நிறைவடைந்ததும் இரவு காரில் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து மீண்டும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, கோவை மாநகரக் காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 11 மணி முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை முக்கியப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.   

ட்ரோன்

கோவை மாவட்டத்தில் உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை, லட்சுமி மில் சந்திப்பு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், காளப்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களைப் பறக்கவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.