இலங்கை சென்றடைந்தார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - கொழும்புவில் உற்சாக வரவேற்பு!

 
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (ஏப். 19) இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு, அப்போதைய துணை ஜனாதிபதி கிரிஷன் காந்த் இலங்கைக்குச் சென்றிருந்தார். அதன் பிறகு சுமார் கால் நூற்றாண்டு காலம் கழித்து, இப்போதுதான் இந்தியத் துணை ஜனாதிபதி ஒருவர் இலங்கை மண்ணில் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 2 நாள் பயணத்தின் போது, சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள்: இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூரியா ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ஆர் ராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழர்களின் கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிய உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் சில முக்கியத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகத் தீர்வு காண்பது குறித்து இந்தப் பயணத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

ஏற்கனவே இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் சமீபத்தில் இந்தியா வந்து சென்ற நிலையில், துணை ஜனாதிபதியின் இந்தப் பயணம் இந்தியா - இலங்கை இடையேயான "அண்டை நாட்டுக்கு முன்னுரிமை" கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.