“வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும்”: கமல்ஹாசன் எம்பி பேச்சு!

 
கமல்ஹாசன்

திரையுலகில் வெற்றி, தோல்வி மற்றும் புகழ்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள் தான் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சினிமா உலகிலேயே அதிகமான திரைப்படங்களைத் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. அரசுகளின் தகுந்த உதவியுடன் சினிமாத் துறையை மேலும் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் மிக உயரிய விருதை ஒரு சாதாரணத் திரைப்படத் தொழிலாளி நேரடியாகப் பெறும் நாளைத் தான் நேரில் கண்டு மகிழ வேண்டும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

"வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் (போலிப் புகழ்ச்சி) வரும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வளர்ச்சிப் பாதையில் உறுதியாகப் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ்."

பாரதிராஜா வெறும் இயக்குநர் மட்டும் அல்ல; அவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய குடும்பம் போன்றவர். "அவர் என் வீட்டில் பலமுறை வந்து தங்கி உறங்கியிருக்கிறார், அவரை நான் பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். அவர் என் சொந்தக் குடும்ப உறுப்பினரைப் போன்றவர்" எனக் குறிப்பிட்டார்.

 "பாரதிராஜா போல ஒரு கலைஞன் வேறு யாரும் இல்லை" என்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரே பாராட்டியுள்ளார். தோல்விகளுக்கு அஞ்சாத அப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியதில் தான் பெரும் பெருமை கொள்வதாகவும் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.