பகீர் வீடியோ... பிலிப்பைன்ஸில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானப்படை விமானங்கள் - 4 விமானிகள் பலி!

 
பிலிப்பைன்ஸ் விமான விபத்து

பிலிப்பைன்ஸ் நாட்டில் வழக்கமான பயிற்சிக்காகப் பறந்த விமானப்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்கள் வானிலேயே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான கோரச் சம்பவத்தில், 4 விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் விமானப்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஃபடங்காஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஃபர்னாண்டோ விமானப் படைத்தளத்தில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்து உலக நாடுகளின் விமானப் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான 'SF-260' ரகத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்கள் வழக்கமான விமானப் பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஃபர்னாண்டோ விமானப் படைத்தளத்திலிருந்து வானில் பறந்துள்ளன. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து வானிலேயே ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டுள்ளன. மோதிய வேகத்தில் பலத்த சேதமடைந்த இரண்டு விமானங்களும், விமானப் படைத்தளத்தின் வளாகத்திற்குள்ளேயே தீப்பிடித்துக் கூளமாக நொறுங்கி விழுந்துள்ளன. விபத்து நிகழ்ந்த உடனே மீட்புப் படையினர் விரைந்து சென்று பார்த்தபோது, விமானத்தில் பயணம் செய்த 4 விமானிகளும் உடல் நசுங்கி உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது. நல்வாய்ப்பாக, தரைப்பகுதியில் விமானம் விழுந்த பகுதியில் வேறு எந்தக் கட்டடங்களோ பொதுமக்களோ இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரமான விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகப் பிரத்யேக விசாரணைக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, பிலிப்பைன்ஸ் விமானப்படை தனது பயன்பாட்டில் உள்ள அனைத்து 'SF-260' ரகப் பயிற்சி விமானங்களின் இயக்கத்தையும் தற்காலிகமாக அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் வசம் உள்ள 'SF-260' ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் கூட, பிலிப்பைன்ஸின் வடக்கு மலைப்பகுதியில் இதே போன்றதொரு 'SF-260' ரகப் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதற்கு முன்னர் கடந்த 2023-ஆம் ஆண்டிலும் 'SF-260 TP Marchetti' ரக விமானம் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் பலியாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற விபத்துகள் பிலிப்பைன்ஸ் விமானப்படையின் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளன.