பகீர் வீடியோ... ஜலகண்டீஸ்வரர் கோவிலில் ஆபாச நடனமாடி ரீல்ஸ் - இந்து முன்னணி அதிரடிப் புகார்!
வேலூரின் அடையாளமாகத் திகழும் ஜலகண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில், புனிதத்தைக் கெடுக்கும் வகையில் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயம், தமிழகத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சிவனடியார்களும் வந்து செல்லும் இந்த ஆலயத்தின் பிரகாரத்தில், சமீபத்தில் வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணுடன் இணைந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடி அதனை ரீல்ஸாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தச் செயலைக் கண்டித்து இந்து முன்னணியினர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், அமைதி நிலவ வேண்டிய கோவில் வளாகத்தில், ஆபாசமான முறையில் நடனமாடி வீடியோ எடுப்பது பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிறது. புனிதமான இந்த ஆலயத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட அந்த ஜோடியைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகாரின் அடிப்படையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பது குறித்து வேலூர் வடக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பல கோவில்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
