பகீர் வீடியோ: காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்ரவதை - பஞ்சாயத்து மூலம் ரூ.5 லட்சம் அபராதம்!

 
தலைகீழாக காதலி பஞ்சாயத்து

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியில் காதலியைச் சந்திக்கச் சென்ற வாலிபரை ஒரு தரப்பினர் கயிற்றால் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தாக்கியதுடன், அவரை விடுவிக்கப் பஞ்சாயத்து கூட்டிப் பணம் வசூலித்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

சஹாரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குப் பெண்ணின் குடும்பத்தினரிடம் அவர் சிக்கிக் கொண்டார்.


ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த இளைஞரைக் கயிற்றால் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து தாக்கியுள்ளனர். அதன்பிறகு அவரைக் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த இளைஞரின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குக் கூட்டப்பட்ட கிராம சபை கூட்டத்தில், வாலிபரை விடுவிக்க அவரது குடும்பத்தாரிடம் ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றிப் பணத்தைக் கொடுத்து அவர்கள் இளைஞரை மீட்டுச் சென்றுள்ளனர்.

இளைஞரைச் சித்ரவதை செய்யும் அந்தக் கொடூரக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.