சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் மண்டியிட்டுப் போராட்டம் - வைரலாகும் வீடியோ!

 
சேலம் நகராட்சி திமுக

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகளை நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே மண்டியிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் உள்ள வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு, சாக்கடை மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை அளித்து வந்துள்ளனர். இப்பிரச்சனைகள் தொடர்பாக நகராட்சி கூட்டங்களிலும், நகராட்சி ஆணையர் மற்றும் தலைவரிடமும் திமுக கவுன்சிலர்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, நகராட்சி அலுவலக வளாகத்திலேயே திமுகவைச் சேர்ந்த 7-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் திடீரெனப் தரையில் மண்டியிட்டு வினோத முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். "பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை; நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆளும் கட்சி கவுன்சிலர்களே தங்களது சொந்த நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மண்டியிட்டுப் போராட்டம் நடத்திய சம்பவம் சேலம் பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.