ஆபாச வீடியோ... பிரபல யூடியூப் தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு!

 
யூடியூப் தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா யூடியூப் தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா

சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டு மிகவும் பிரபலமாக வலம் வரும் யூடியூப் ஜோடியான கிருஷ் - ஐஸ்வர்யா தம்பதி மீது, ஆபாச உள்ளடக்கங்களை வெளியிடுவதாகக் கூறி தற்போது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் நவேஷ் ராஜ் என்பவர், இன்று கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் யூடியூப் தம்பதியினருக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரபலமாக இருக்கும் கிருஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரகு தம்பதியினர், தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ந்து இளைஞர்களையும் சிறுவர்களையும் சீரழிக்கும் வகையிலான ஆபாசமான கருத்துகளையும், அநாகரிகமான வீடியோக்களையும் பதிவேற்றி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

யூ-ட்யூப்

இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் சமூக ஒழுக்கத்தைக் கெடுக்கும் விதமாக அமைந்திருப்பதால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வழக்கறிஞர் நவேஷ் ராஜ் தனது புகாரில் சட்ட நடவடிக்கை மட்டுமின்றி, அவர்களது கணக்குகளை முடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்:

"இளைஞர்களின் மனநலனைக் காக்கும் பொருட்டு, கிருஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய வீடியோக்களை யூடியூப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக வலைத்தள தளங்களில் இருந்தும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் காவல் துறை உத்தரவிட வேண்டும்."

செல்போன் வீடியோ  இளம்பெண் பாலியல்

சமூக வலைத்தளங்களில் லைக்குகளுக்காகவும், வியூஸ்களுக்காகவும் தம்பதியினர் என்ற பெயரில் பலர் எல்லை மீறி வருவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கோவையின் முன்னணி யூடியூப் தம்பதி மீது சைபர் கிரைமில் புகார் பாய்ந்திருப்பது டிஜிட்டல் தளங்களில் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.