பகீர் வீடியோ... கையில் குழந்தையுடன் ரயில் பெட்டிகளுக்கிடையே உசுரைப் பணயம் வைத்து இளம்பெண் பயணம்!

 
ரயில் பயணம்

நகரும் ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடைப்பட்ட குறுகிய இணைப்புப் பகுதியில், தாய் ஒருவர் தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சியில், ரயில் அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்புப் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையை மடியில் அணைத்தபடி அமர்ந்துள்ளார். தொடர்ச்சியான குலுக்கல்கள் மற்றும் திடீர் அதிர்வுகள் நிறைந்த இந்த இணைப்புப் பகுதி, ரயிலிலேயே மிகவும் அபாயகரமான இடமாகப் பார்க்கப்படுகிறது. சிறிதளவு சமநிலை தவறினாலும் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தக் காட்சி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களது கவலையையும் கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.


இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தாய் மற்றும் குழந்தையைக் உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் ரயில்வே அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயிலில் கூட்ட நெரிசல் அல்லது பயணச் சீட்டு கிடைக்காத சூழல் காரணமாக அந்தப் பெண் இப்படிப் பயணித்திருக்கலாம் எனச் சிலர் பரிதாபமாக கூறினாலும், உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய ஆபத்தான பயணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலும், இச்சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் தேதி ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், பயணிகள் தங்களது உயிரைப் பணயம் வைக்கக் கூடாது என  எச்சரிக்கின்றனர்:

ரயில் இயங்கிக் கொண்டிருக்கும் போது வாசற்படி, பெட்டிகளின் இணைப்புப் பகுதிகள் அல்லது தடைசெய்யப்பட்ட ஆபத்தான இடங்களில் நிற்பதையோ அமர்வதையோ பயணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறு தவறும் பெரிய உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், பயணிகளின் பாதுகாப்பில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான கண்காணிப்பும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அவசியம் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.