பகீர் வீடியோ... விஜய்யைப் வேகமாகப் பின்தொடர்ந்த பைக்குகள் மோதி விபத்து - 5 பேர் காயம் - வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸ்!

 
விஜய் விஜய்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் தீவிரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற பரப்புரையின் போது, அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்த தொண்டர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

நெல்லை கே.டி.சி நகர் பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றுப் பேசினார். இதற்காக 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நெல்லையில் தனது உரையை முடித்த விஜய், தாழையூத்து, தச்சநல்லூர் வழியாகத் தூத்துக்குடி நோக்கித் தனது வாகனத்தில் பயணமானார்.

விஜய் தூத்துக்குடி நோக்கிச் சென்றபோது, உற்சாகமடைந்த தவெக தொண்டர்கள் ஏராளமானோர் தங்களது இருசக்கர வாகனங்களில் அவரது வேனை வேகமாகப் பின்தொடர்ந்தனர். தூத்துக்குடி அருகே ஒரு பைக் நிலைதடுமாறி கீழே விழ, அதன் பின்னால் அதிவேகமாக வந்த அடுத்தடுத்த பைக்குகளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் ஐந்து தொண்டர்கள் காயமடைந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் நேரில் விசாரணை நடத்தினார். விபத்துக்குள்ளான தொண்டர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விஜய்

இன்று காலைதான் நடிகர் ரஜினிகாந்த், "நடிகர்களின் வாகனங்களுக்குப் பின்னால் ரசிகர்கள் பின்தொடர வேண்டாம், அது உயிருக்கே ஆபத்தாக முடியும்" என்று எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே விஜயின் பரப்புரை பயணத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரப்புரை பயணங்களில் கூட்ட நெரிசலையும், பின்தொடரும் வாகனங்களையும் கட்டுப்படுத்த தவெக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை அறிவுறுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.