வியட்நாம் படகு விபத்து.. தமிழர்களுக்கு உதவ சேலம் டி.ஐ.ஜி வியட்நாம் விரைவு - முதல்வர் விஜய் உத்தரவு!
வியட்நாமில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாகச் செய்யத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி இந்தியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் பலியான 15 பேரில், 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய 5 பேர் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துத் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகளைத் தீவிரமாக ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், மீட்பு மற்றும் உதவிப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

வியட்நாமில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளைக் களத்தில் நேரடியாக ஒருங்கிணைக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமானி ஐ.பி.எஸ் அவர்களை வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்கு உடனடியாகச் செல்ல முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அங்கு செல்லும் அவர் கீழ்க்கண்ட முக்கியப் பணிகளை முன்னெடுப்பார். விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் கொண்டு வருவதற்கான பணிகளைத் துரிதப்படுத்துவது. விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் அவர்களுக்கான இதர தேவைகளை எளிதாக்குவது.
