வியட்நாம் படகு விபத்து.. இருவரின் உடல்கள் சென்னை வந்தடைந்தன - உறவினர்கள் சோகம்!

 
வியட்நாம்

வியட்நாமில் அண்மையில் நடைபெற்ற கொடூரப் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்கள், இன்று  தாயகம் கொண்டு வரப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக, உயிரிழந்த இருவரின் உடல்கள் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.

வியட்நாம் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழகத்திற்கு மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அதன்படி, முதற்கட்டமாகத் தனி விமானம் மூலம் ரவிசங்கர் (திருவண்ணாமலை), வினயகுமார் (வேலூர்) ஆகிய இருவரது உடல்கள் இன்று சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன: இவர்களது உடல்களை சென்னை விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்கப் பெற்றுக் கொண்டனர். பின்னர், உடல்கள் தங்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

வியட்நாம்

விபத்தில் பலியான சென்னையில் வசித்த சந்தோஷ்குமார் மற்றும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாபு ஆகிய இருவரது உடல்களும் இன்று காலை 11:45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மற்ற 6 பேரின் உடல்கள், இரு வெவ்வேறு கட்டங்களாக இன்று கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேராகக் கொண்டுவரப்பட உள்ளன.

வியட்நாம்

வியட்நாமிற்குச் சுற்றுலாச் சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து ஒரே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான இச்சம்பவம், அவர்களின் சொந்த கிராமங்களில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.