வியட்நாம் படகு விபத்து.. படகின் கேப்டன் கைது; தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்!

 
வியட்நாம் படகு

வியட்நாமின் பு குவோக் கடற்பகுதியில் 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உயிரிழக்கக் காரணமான படகு விபத்து தொடர்பாக, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகப் படகின் கேப்டனை வியட்நாம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அழகிய கடற்கரைகள் மற்றும் தீவுக்கூட்டங்கள் நிறைந்த வியட்நாமின் பு குவோக் பகுதியிலுள்ள அன் தோய் தீவுக்கூட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அதிவேக சொகுசுப் படகை இயக்கியதே படகு கவிழக் காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், 57 வயதான படகின் கேப்டனை வியட்நாமின் அன் ஜியாங் மாகாணக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வியட்நாம்

விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அப்போது மழை பெய்யவில்லை என்பதால் மற்ற சுற்றுலாப் படகுகளும் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தன என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த தனியார் செல்போன் நிறுவனத்துடன் தொடர்புடைய விநியோகஸ்தர்கள் 'திரீலேண்ட்' மற்றும் 'சாய் வியட்நாம்' ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் சுற்றுலா சென்றிருந்தனர்.

32 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 36 பேருடன் சென்ற அதிவேகச் சொகுசுப் படகு, அன் தோய் துறைமுகத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தது. ஹான் மே ருட் னோய் தீவின் கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் வந்த போது, திடீரென வீசிய பலத்த காற்றினாலும் ராட்சத அலைகளினாலும் படகு நிலைதடுமாறி, கண் இமைக்கும் நேரத்திற்குள் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

வியட்நாம்

அன் தோய் எல்லை பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் பிற சுற்றுலாப் படகுகளின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். படகு ஊழியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எனினும், 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் ஃபு குவோக் பகுதிக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 18 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் அங்குச் சென்றுள்ளனர்.

பொதுவாகப் பயணிகள் பு குவோக்கிலிருந்து அதிவேகப் படகுகள் மூலமாகவே அருகிலுள்ள சிறிய தீவுகளுக்குச் சென்று ரசிப்பது வழக்கம். ஆனால், தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்தைத் தொடர்ந்து, பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் தீவுகளுக்கு இடையிலான தங்களது அதிவேகப் படகு சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.