பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்த பெண்... நெகிழ்ச்சி வீடியோ!
வியட்நாம் நாட்டின் தாய் குவாங் மாகாணம் புலுவாங் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். வியட்நாமை சேர்ந்த 25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது கணவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவசரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆஸ்பத்திரியை அடைவதற்குள் வாசலிலேயே அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி அதிகமாகி மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலேயே அவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதைக் கண்ட ஆஸ்பத்திரி டாக்டர்களும் நர்சுகளும் உடனடியாக ஓடிவந்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனை அறைக்கு அழைத்துச் சென்றனர்.
பிறந்த ஆண் குழந்தை சுமார் 2 கிலோ எடையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், ஆஸ்பத்திரி வாசலில் நடந்த இந்த வியக்கத்தக்க சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பலரது நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.
