கரூர் துயரம் முதல் சங்கீதா விவாகரத்து வரை - விஜய்யைத் துரத்தும் 27ம் தேதி!

 
கரூர் விஜய்

நடிகர் விஜய் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக '27' என்ற தேதியில் நடந்து வரும் தொடர்ச்சியான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் "27 Timeline" என்ற பெயரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, ஒவ்வொரு மாதமும் 27-ஆம் தேதி ஏதோ ஒரு முக்கிய திருப்பத்தை அல்லது துயரத்தை சுமந்து வருவதாக அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

செப்டம்பர் 27, 2025: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி, 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், தற்போது சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.

ஜனநாயகன்

அக்டோபர் 27, 2025: இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சரியாக ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்தில் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் இடத்திற்கே செல்லாமல் அவர்களை வரவழைத்தது அப்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

நவம்பர் 27, 2025: அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், அக்கட்சியிலிருந்து விலகி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது தவெக-வின் முக்கிய அரசியல் மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது.

டிசம்பர் 27, 2025: விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஜனவரி 27, 2026: 'ஜனநாயகன்' பட வெளியீட்டில் நிலவிய சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், தனிநீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியானது.

ஜனநாயகன்

பிப்ரவரி 27, 2026 அன்று, விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியான தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நீண்ட காலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த விரிசல் ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம், சமூக வலைதளங்களில் சங்கீதா குறித்து நடத்தப்படும் தனிநபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 27-ஆம் தேதியில் இத்தகைய முக்கியச் சம்பவங்கள் நடப்பது தற்செயலானதா அல்லது ஏதேனும் எண் கணித தொடர்பா என்ற விவாதம் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாத இறுதியிலும் விஜய் தொடர்பான செய்திகளைத் தமிழகமே ஒருவித பதற்றத்துடன் கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.