"விஜய் அண்ணா நல்லா இருக்கணும்" ... ஜப்பான் கோவிலில் தொங்கவிடப்பட்ட பிரார்த்தனை அட்டை!
ஜப்பான் நாட்டில் உள்ள புகழ்பெற்ற தொன்மை வாய்ந்த மெய்ஜி ஜிங்கு ஆலயத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது ரசிகரான அமைச்சர் அருண்ராஜின் உறவினர் எழுதி தொங்கவிட்ட பிரார்த்தனை அட்டை இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெய்ஜி ஜிங்கு ஷிண்டோ ஆலயத்தில், பக்தர்கள் தங்களது விருப்பங்கள் மற்றும் பிரார்த்தனைகளை 'எமா' என்ற மரப்பலகை அட்டைகளில் எழுதி ஆலய வளாகத்தில் தொங்கவிடுவது அங்குள்ள பாரம்பரிய வழக்கமாகும். இந்நிலையில், அமைச்சர் அருண்ராஜின் உறவினர் ஒருவர் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, அந்த ஆலயத்தில் ஒரு பிரார்த்தனை அட்டையை எழுதித் தொங்கவிட்டுள்ளார்.

அந்த அட்டையில், "விஜய் அண்ணாவுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும். அவரது தமிழக வெற்றிக் கழகம் மூலம் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும். வாழ்க தமிழ்!" என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது.
ஜப்பான் கோவிலில் தனது உறவினர் எழுதித் தொங்கவிட்ட இந்தச் சிறப்புப் பிரார்த்தனை அட்டையின் புகைப்படத்தைச் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் அருண்ராஜ், தனது நெகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
உலகளவில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், தவெக தலைவர் விஜய்க்கு இருக்கும் அன்பையும் ஆதரவையும் இந்தச் சம்பவம் உணர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படத்தைப் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
