11 அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு - விஜய் அறிவிப்பு!

 
விஜய் பிரச்சாரம் தேர்தல் இடைத்தேர்தல்

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களை நியமனம் செய்து கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 11 முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி. சம்பத், கே. இராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், எம்.ஆனந்தன், கடம்பூர் ராஜு, கே.டி. பச்சைமால், வெல்லமண்டி என். நடராஜன், என்.ஆர். சிவபதி, வைகைச்செல்வன் மற்றும் எஸ். வளர்மதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் டாக்டர் ஜெ. சந்தீப் ஆனந்த், கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன் மற்றும் வி.சி.ஆர். குமரன் ஆகியோரும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தவெக

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய புதிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மாவட்டக் கழகச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரான மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும், ஏற்கெனவே கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் அனைத்தும் தலைவர் விஜயின் நேரடி உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் அனைவரும் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.